Saturday, May 1, 2010

கோடிகளைத் தொடரும் கேடிகள்


கொஞ்ச நாளாகவே, பத்திரிகை செய்திகளில் சர்வ சாதாரணமாக கோடிக்கணக்கான ரூபாய் டீலிங்குகள் பற்றி சொல்லப்படுவது, தெருக்கோடியில் சிங்கிள் டீக்கே திண்டாடுகிற பாமரன்களை கொண்ட தேசத்திற்கு அதிர்ச்சி தான்.

முதலில் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி விழா ஆண்டில் போடப்பட்ட, ரூபாய் நோட்டு மாலைகளில் பல கோடி ரூபாய் இருந்ததாகக் கூறப்பட்டது; அதற்கே நமக்கு தலை சுற்றியது. அடுத்தது, ஆந்திராவில், முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ராமாராவின், பேரன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு திருமண வரதட்சணையாக, 500 கோடி ரூபாய்க்கான சொத்து வழங்கப்படுவதாக வந்த செய்தி. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் புழங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பற்றி தகவல்கள் கசிந்ததும், சராசரி இந்தியன் செய்வதறியாமல் திக்பிரமை பிடித்து நிற்கிறான். எங்கிருந்து வந்தது இத்தனை கோடிகள்? இவை யாருடைய பணம்? இந்த நாடு ஏழை நாடா? சராசரி இந்தியன், வீட்டுக்கு வாடகை தர முடியாமல் தவிப்பதும், தன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் திணறுவதும், தன் பெற்றோருக்கு நல்ல மருத்துவ வசதியை செய்து தர முடியாத இயலாமைக்கு வருந்துவதும், தண்ணீரின்றி, மின்சாரமின்றி, கொசுவை அடித்தே, இரவைக் கழித்து விடுவதுமாய் அப்பாவி மக்கள் பழகி விட்டனர். இருந்தாலும், சிலரிடம் மட்டுமே, இத்தனை கோடிகள் எப்படி புழங்குகிறது?

ஐ.பி.எல்., கொச்சி அணியின் பங்குகளை தன்னுடைய காதலி சுனந்தா புஷ்கருக்கு பெற்றுத்தர, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் மீது குற்றம் சாட்டப் பட, அது அவர் பதவியையே பறித்தது. ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அவரது உறவினர்களையே பினாமிகளாக்கி, சில அணிகளை அவர் கைப்பற்றியுள்ளாராம். அதற்காக அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட செல்ல, அதற்கு முன்பே ஒரு இளம் பெண் முக்கிய ஆவணங்களுடன் வெளியேறிவிட்டாராம். அந்த இளம் பெண், சாராய சாம்ராஜ்ய அதிபர் விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள். ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகள் போல் நடக்கும், இந்த சம்பவங்களை கவனிக்கும் போது, இது ஒரு ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படத்தான் செய்யும். தேர்தலுக்கு முன், சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கோடிக்கணக்கான ரூபாயை மீட்டு, சராசரி இந்தியனுக்கு உதவுவதாக கூறிய கட்சிகள், தற்போது நம் தேசத்திலேயே சர்வசாதாரணமாக உலவும் இந்த கோடிகளை பார்த்து, அந்த, 'கேடி'கள் மவுனமாக இருப்பதற்கு என்ன அர்த்தம்?

ஏதோ இருக்கு, என்னமோ நடக்குது, எல்லாருக்கும் கொள்ளையில் பங்கு இருக்கு என்று, இன்று, சாமான்ய இந்தியனுக்குப் புரிகிறது. இருந்தாலும் என்ன... அவன் இந்த நெருப்பு வெயிலில் பருப்பு வாங்க ரேஷன் கடையில் க்யூவில் நின்று கொண்டிருக்கிறான். கிரிக்கெட் ஆட்டமா, சூதாட்டமா? இதற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மவுசு அல்லது மவுசு இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்? சினிமா உலகினர், தொழிலதிபர்கள், தொலைக்காட்சி சேனல்கள், அரசியல்வாதிகள் அனைவரும் சேர்ந்து, கிரிக்கெட்டை வைத்து மக்களை ஏன் முட்டாள்களாக்குகின்றனர். ஏற்கனவே மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, டில்லி, பஞ்சாப், கோல்கட்டா, ராஜஸ்தான் என்று எட்டு அணிகள் ஐ.பி.எல்.,லில் இருக்க, போதாக்குறைக்கு புதியதாக கொச்சி மற்றும் புனே அணியும் உருவாக்கப்பட்டது. இதில் கொச்சி அணி மட்டும் 1,533 கோடிக்கு, 'ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வோல்ட்' என்ற நிறுவனத்தால் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்றால், மொத்தம் எத்தனை ஆயிரம் கோடிகள் இந்த கேடு கெட்ட ஆட்டத்தில் புழங்குகிறது என்று யோசித்து பாருங்கள்.

இந்த கொச்சி அணியின் பங்குகளில், தன் காதலி சுனந்தா புஷ்கருக்கு 70 கோடி ரூபாய்க்கான பங்கை, இலவசமாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர் பெற்றுத் தந்தார் என்பது தான், ஐ.பி.எல்.,லின் தலைவர் லலித் மோடியின் குற்றச் சாட்டு. ஆனால், லலித் மோடி மட்டும் நேர்மையானவரா என்றால், அதுதான் இல்லை. அவர் அமெரிக்காவில் இருந்தபோதிலும், 400 கிராம் கோகைன் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவும், ஆள்கடத்தல் மற்றும் தாக்குதல் நடத்தியதற்காகவும், இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை அடைந்ததாக சொல்கின்றனர். இப்படிப்பட்ட ஒருவர், மிக உயர்ந்த பதவியில் இருப்பது, அப்பதவிக்கு கேடு என்று சொல்ல முடியாது; இப்படிப்பட்டவர்கள் தான், இன்று உயர் பீடங்களை அலங்கரிக்கின்றனர்.

இது இந்தியாவின் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மிகவும் பயங்கரமாகவும் இருக்கிறது. டில்லியில் காமன்வெல்த் போட்டிக்காக கட்டப்பட இருக்கும் மெட்ரோ பாலத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, 400 குடும்பங்கள் துரத்தப்பட்டுள்ளன. அவர்கள், தங்கள் குடிசைகளையும் இழந்து தெருவில் அனாதைகளை போல், இன்று நாய்களை விட மோசமான நிலையில் வாழ்கின்றனர். அந்த 400 குடும்பங்களில், 300 குடும்பங்கள் தமிழர்கள். விரைவில் நடக்கவிருக்கும் காமன் வெல்த் போட்டிக்காக, டில்லியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால், ஏழ்மையை விரட்டுவதாக கூறி, ஆட்சியை பிடிக்கும் அரசியல்வாதிகள், ஏழைகளை விரட்டுவதுதான் தொடர்ந்து நடந்து வரும் அவலம். அதற்கேற்றாற் போல், தெற்கு டில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே, நேரு விளையாட்டு அரங்குக்கு செல்லும் வகையில் மெட்ரோ ரயில் பாலம் கட்டப்படுகிறது. இந்தப் பகுதியில் 35 ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வரும் விளிம்பு நிலை மக்கள், இரவோடு இரவாக துரத்தப்பட்டுள்ளனர்;

இது என்ன நியாயம்? இரண்டுமே விளையாட்டு தான். ஒரு விளையாட்டு, பணக்காரனை மேலும் கொழிக்கவும், செழிக்கவும் வைக்கிறது; இன்னொரு விளையாட்டு, ஏழைகளை, அவர்களுடைய குடிசைகளை விட்டு நடுத்தெருவுக்கு துரத்துகிறது. இங்கே, யாரும் மாற மாட்டார்கள். மறுபடியும் அவர்கள் ஓட்டு கேட்க வருவர். நாமும் மாறாமல், அவர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் வாங்கி, ஓட்டுப் போடுவோம். அரசியல்வாதிகளுக்கு ஒரு கோரிக்கை... யார், யாரோ, ஆயிரம் கோடிகளில் சம்பாதிக்க, உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்தும் எங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயா? ஆகவே, இனியாவது எங்களது ஓட்டுக்கான பணத்தை உயர்த்தி, ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரமாவது கொடுங்கள். ப்ளீஸ்... உங்களுக்கு ஐந்து வருஷம் சான்ஸ். எங்களுக்கோ ஐந்து வருஷத்திற்கு ஒருமுறைதான். இந்த முறை கூட கொஞ்சம் போட்டுப் கொடுங்க....

அப்சல், சிந்தனையாளர்


No comments:

Post a Comment