Sunday, September 12, 2010

வீழ்ச்சியின் பிடியில் வேளாண்மை

Article by Mr. கோ.லட்சுமி நாராயணன்

"இந்த ஆண்டு சர்க்கரை மற்றும் அரிசி போதுமான விளைச்சல் இல்லை; இதனால் உணவுப் பற்றாக்குறை வரும். பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் காலம் மாறிப் போய் விட்டது' என, விவசாய அமைச்சர் சரத்பவார் கூறுகிறார். இந்நிலைமையை சமாளிக்க, தாய்லாந்து, சீனா மற்றும் பாகிஸ்தானிருந்தும் கூட லட்சக்கணக்கான டன் அரிசி, சர்க்கரை இறக்குமதி செய்யப்படுமென்று, உணவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது; உண்மை நிலை அதுவல்ல.

ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள், விவசாயம் செய்வதில் போதிய வருமானம், லாபம் இல்லாமல், இத்தொழிலை விட்டு விட்டனர் அல்லது குறைத்து கொண்டனர். சிலர் வறுமையிலும், பலர் நஷ்டத்திலும் தோய்ந்து துவண்டு விட்டனர். லட்சக்கணக்கான டன் அரிசி, கோதுமை, சர்க்கரை இறக்குமதிக்கு செலவாகும் கோடிக்கணக்கான ரூபாயை, விவசாய நலனுக்கு செலவிட்டாலே போதும். விவசாயி ஊக்கம் பெற்று, உற்பத்தி பெருகும் நிலை உருவாகும். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகி விட்டது. மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளால், சர்க்கரை கிலோ 12.50 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது நடந்து ஆறு, ஏழு மாதங்களில் சர்க்கரை கிலோ 36 ரூபாய்க்கு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது வேடிக்கையாக உள்ளது. இதில், அரசியல்வாதிகளின் ஊழல்களும் அடக்கம்.

கடந்த ஆண்டுகளில், நம் நாட்டின் சர்க்கரை ஆலைகளின் லாபம் 30 கோடியிலிருந்து, 901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிக்கு தொடர்ந்து நஷ்டம். எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தகுந்த ஆதார விலையை அரசு அளிக்க வேண்டும். அதே சமயம் நுகர்வோர் வாங்கும் வகையில், விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல், இடைத்தரகர்களை குறைத்து அல்லது நீக்கி, அரசு செயல்பட வேண்டும். மேற்கண்ட இரு வழிகளையும் அரசு முக்கியத்துவம் கொடுத்து ஆராய வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி தயாரிக்கும் நிறுவனம், அவர்களே விலை நிர்ணயிக்கின்றனர். தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம், தான் தயாரித்த அப்பெட்டிக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கு தங்க நகை வியாபாரிகளே, தங்கம் சார்ந்த தொழில் செய்பவர்களே விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், விவசாய நாடு என்று கூறிக் கொள்ளும் அரசு தான், நெல்லுக்கும், கோதுமைக்கும், கரும்புக்கும் விலை நிர்ணயம் செய்கிறது. குளிர்சாதன அறையில் உட்கார்ந்து, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விவசாயப் பொருளுக்கு கட்டுப்படியாகாத விலையை நிர்ணயம் செய்கின்றனர். உண்மையான விவசாயியை கலந்தாலோசிப்பதில்லை. விலை நிர்ணயத்தில், விவசாயியின் பங்கு அறவே இல்லை. உற்பத்தி செய்தவனுக்கு விலை கூற வழியில்லை. இப்படிப்பட்ட அரசின் அணுகுமுறையால், விவசாயம் பாதிப்படைந்து பல விவசாயிகள், நிலத்தை விற்று நகரத்திற்கு சென்று விட்டனர். பலர் பணப்பயிர் விவசாயத்துக்கு மாறி விட்டனர். மேலும் பலர், நிலத்தை ப்ளாட் போட்டு விற்று விட்டனர்.

விவசாய நிலப்பரப்பு குறைந்து விட்டது. விவசாயத்தில் லாபம் இல்லாததால் தான், கிராமவாசிகள் நகரத்திற்கு சென்று, நகரத்தில் ஜன நெருக்கடியை உருவாக்கி விட்டனர். விவசாயத்தில் கூலி வேலை செய்தவர்கள், மற்ற வேலைகளுக்கு சென்று, அதிக கூலி பெறுவதால் விவசாயத் தொழிலுக்கு வேலையாட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசின் 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டமும் காரணம். "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்' என்றார் காந்தி. ஆனால், இந்தியாவில் சரியான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத தலைவர்களால், விவசாயம் வஞ்சிக்கப்படுகிறது. விவசாயி ஆண்டுக்கு ஆண்டு, கடன் வாங்குகிறார். அரசும் வருடா வருடம் கடன் கொடுத்து, விவசாயியை கடனாளியாகவே வைத்திருக்கிறது. விவசாயி என்று தன்னிறைவு அடைகிறான் என்பது கேள்விக்குறியாகி விட்டது. விவசாயத்தை நலிவடையச் செய்து, விவசாயிகளை விவசாயத் தொழிலாளிகளை நகரத்தை நோக்கி விரட்டியது அரசு தான்.

பட்டுக்கோட்டையார் எழுதிய, "காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற பாடல், யதார்த்தத்தை உரைக்கிறது. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என பலரும், தங்கள் மகன்களை தங்கள் துறையிலேயே வளர்க்க விரும்புவர். ஆனால், ஒருபோதும் தன் மகனை விவசாயம் செய்ய விவசாயி ஊக்கப்படுத்துவதில்லை. தான் விளைவித்த நெல்லை வண்டியில் ஏற்றி, நான்கைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயி எடுத்துச் சென்றால், உடனே கொள்முதல் செய்வதில்லை. காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.

விவசாயி உற்பத்தி செய்த அந்த நெல் (அன்னலட்சுமி) மூட்டைகள், சாலை ஓரத்தில் அடுக்கப்பட்டு, எப்போது கொள்முதல் செய்வாரோ என்று காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில், இரண்டு அல்லது மூன்று நாள் கூட நெல்லுக்கு பாதுகாப்பாக, அம்மூட்டையின் மீது விவசாயி, உறங்குவதைப் பார்க்கலாம். அறுவடை செய்த நெல்லை தூய்மைப்படுத்த, காய வைக்க சரியான களம் இல்லாததால், நெடுஞ்சாலையில் பஸ் வழித்தடத்தில் நெல்லை சுத்தப்படுத்தவும், காய வைக்கவும் நேரிடுகிறது. இதனால் வாகனங்களும், பயணிகளுக்கும் கூட பல சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஒருவழியாக நெல் கொள்முதலுக்கு வந்தவுடன், மூட்டையை தராசில் தூக்கி வைத்து எடை போட, அரசால் நியமிக்கப்படும் ஊழியர்கள், தராசில் வைத்தவுடன் தன் இரு கைகளையும் சேர்த்து மூட்டையில் உள்ள நெல்லை எவ்வளவு அள்ள முடியுமோ (மூட்டைக்கு ஒரு முறை மட்டும்) அவ்வளவு தங்களுக்கு எடுத்து கொள்கின்றனர். அது நிச்சயம் ஒரு கிலோவுக்கு குறையாமல் இருக்கும். கொள்முதல் செய்யும் அலுவலரோ, ஒவ்வொரு மூட்டைக்கும் இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை, மாமூலாக வசூலித்து விடுவார். கொடுக்க மறுத்தால், "ஈரப்பதம் அதிகம், நெல் தரம் சரியில்லை...' எனக் கூறி, விவசாயியை மிரட்டி வளைத்து விடுவார்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, பாடுபட்டு உற்பத்தி செய்த விளைப்பொருளை விற்க, லஞ்சம் கொடுக்கும் உற்பத்தியாளரை, விவசாயியை இந்நாட்டில் தான் பார்க்கலாம். பாவம் விவசாயி, அவனுக்கு இந்த அதிகாரி வர்க்க சூழ்ச்சிகளிலிருந்து விடுபட வழி தெரிவதில்லை; வழியும் இல்லை. வி.ஏ.ஓ., தலையாரி ஆகியவர்களை சரிகட்டி, ஆற்றுப் படுக்கையில் மிளகாய் பயிரிடுகிறான் விவசாயி. தன் மனைவி வந்து சட்னிக்கு பச்சை மிளகாய் பறிக்க வந்தால் கூட அதட்டுகிறான். மிளகாய் பழுத்து வற்றல் தயாரான பின், அதை வியாபாரிக்கு, அவர் கூறும் விலைக்கு, அதாவது குறைந்த விலைக்கு விற்கிறான். அந்த மிளகாய் மூட்டை, நகரத்திற்கு செல்கிறது. அங்கு மிளகாய் மூட்டையின் சாக்கு மாற்றப்படுகிறது. பிறகு பல மடங்கு விலை உயர்த்தி, கடைகளுக்கு விற்கப்படுகிறது. இப்போது மிளகாய் உற்பத்தி செய்த விவசாயியே, அதிக விலை கொடுத்து வாங்குகிறான். இதில் அதிக லாபம் அடைந்தவன், விவசாயியும் அல்ல; வாங்கி நுகரும் நாமும் அல்ல. இடையில் சில முதலைகள் ஏப்பமிட்டு விடுகின்றன. விவசாயியின் நிலைமை அந்தோ பரிதாபம்.

இப்படி தொடர்ந்து விவசாயி, பல்முனைத் தாக்குதலால் தாக்கப்படும் போது, தற்கொலை செய்யாமல் வேறு என்ன செய்வான்? "சுழன்றும் ஏர்பின்னது உலகம்; உழுவோன் உலத்தார்க்கு ஆணி' என்று வள்ளுவரும் இன்னும் பலவாறாக உயர்த்தி சொல்கிறார். ஆனால், விவசாயியை அரசு ஒருபுறம், சுயநல அரசியல்வாதிகள் ஒருபுறம், அதிகார வர்க்கம் ஒருபுறம் என, மும்முனைத் தாக்குதலை தொடுக்கின்றனர். இவற்றை எதிர்கொண்டு விவசாயி, தலை நிமிர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ, அந்நாளே இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெரும் நாளாகும்.

                                                                          - கோ.லட்சுமி நாராயணன், கல்வியாளர்

No comments:

Post a Comment